செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி, அரசு குடியிருப்பில் வீடு

73 0

 செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் நிதி மற்றும் வீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவரின் மகன் கோகுல் ஸ்ரீ (17). தந்தை உயிருடன் இல்லை. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு சீர்திருத்தப் பள்ளியில் இருந்த காவலர்கள் தாக்கியதில் கோகுல்ஸ்ரீ உயிரிழந்தார்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை நடத்தி காவல் துறையினரிடம் அறிக்கை கொடுத்தார். இதன்படி, சீர்திருத்தப் பள்ளி காவலர்கள் மோகன், சந்திரபாபு, சரண்ராஜ், ஆனஸ்ட்ராஜ், வித்யாசாகர், விஜயக்குமார் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ கடந்த டிச.31-ம் தேதி மரணமடைந்தார். சிறுவனின் தாயார் பிரியாவுக்கு இழப்பீடாக ரூ. 7.5 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியாக ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாய் பிரியாவுக்கு, தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தாம்பரம் வட்டம் அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் தற்போது கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியை உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும். இக்குழு உரிய ஆய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கே.பாலகிருஷ்ணன் நன்றி: இதனிடையே இழப்பீடு அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியாவை நானும் எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

இந்த வழக்கு குற்றவாளிகளை கைது செய்யவும், அவரது தாயார் பிரியாவுக்கு நஷ்ட ஈடும், அரசு வீடும், வேலையும் வழங்க வேண்டும் என்றும் கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதனை ஏற்று ரூ.10 லட்சம் இழப்பீடும், ஒரு குடியிருப்பும் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு உருவாக்கப்படுமென தாங்கள் அறிவித்தை வரவேற்கிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சிறுவன் கோகுல்ஸ்ரீ வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் பாரபட்சமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.