தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்

78 0

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை.

மாறாக ஏதேனுமொரு வழியில் தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் அதற்கு எதிராக சர்வதேசத்தை நாடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். மக்கள் மத்தியிலும் தேர்தலுக்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

ஆனால் தேர்தலை எதிர்கொள்வதில் காணப்படும் அச்சத்தினால் பல்வேறு வழகளிலும் அரசாங்கம் அதனைக் காலம் தாழ்த்த முயற்சிக்கின்றது.

தேர்தல் செலவுகளுக்கு வழங்குவதற்கு பணம் இல்லை என்று கூறுவதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

நிதி நெருக்கடியால் தேர்தல் செலவுகளுக்கான பணத்தை வழங்குவது சிக்கல் என்று நிதி அமைச்சு நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளது. ஆனால் இது போன்று தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முயற்சிகளும் வெற்றியளிக்காது.

மாறாக ஏதேனுமொரு வழியில் அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்தினால் , ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவும் சர்வதேசத்தை நாடுவோம்.

அரசாங்கம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இதுவரையிலும் முன்னெடுக்கவில்லை. இது தேர்தல் இடம்பெறுமா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

வேதனையான எதிர்காலம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால் அதற்கு என்ன தீர்வு என்பதை அவர் குறிப்பிடவில்லை.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அதன் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வெற்றியளிக்க வேண்டும் என்றார்.