ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: கைதானவர்களுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா மன்னிப்பு!

78 0

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. எனினும் இந்த மன்னிப்பை நிபந்தனைகளுடன் அயத்துல்லா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மன்னிப்பின் முழுவிவரம் இதுவரை வெளிவரவில்லை.

மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்தச் செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது. எனினும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும், தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த மன்னிப்பு செய்தி வெளியாகி உள்ளது.