சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த வாரம்

135 0

இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையில் அடுத்த வாரம் முக்கிய கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த வாரம், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் முகங்கொடுக்கின்ற பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் கூட்டிணைந்து செயற்படுவது பற்றி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதற்படியாக மனோ கணேசன்,  சுமந்திரன், ஹக்கீம் இடையே உரையாடலொன்று நிறைவடைந்திருப்பதாகவும்,  ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர் விக்டோரியா நூலண்ட் மூவின மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டிணைந்து செயற்படுமாறு மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளை கூட்டாக சந்தித்தபோது கோரியதோடு முதலில் காணி விவகாரம் சம்பந்தமாக கூட்டுப் பொறிமுறையொன்றை அமுலாக்குமாறும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.