டுசில்டோர்வ் (Düsseldorf) யேர்மனி, நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்.

231 0

சிறீலங்கா சிங்கள இனவாத அரசு தனது 75ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளை, தாயகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த நாள் எமது “கரிநாள்” என மாபெரும் கண்டனப்போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.

யேர்மனிய நாட்டிலும் தலைநகர் பேர்லின் (Berlin)உட்பட பிராங்போர்ட் (Frankfurt), முன்சன் (München), டுசில்டோர்வ் (Düsseldorf) ஆகிய நகரங்களில் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையினால் 04.02.2023 அன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. டுசில்டோர்வ் (Düsseldorf)நகரின் தொடரூந்துநிலைய முன்பாக மக்கள் ஒன்றுகூடி, அகவணக்கத்தோடும் யேர்மனிய நாட்டுப் பேச்சாளர்களது ஆரம்ப உரைகளோடும் மாநில அவை நோக்கி பேரணி ஆரம்பமாகியது. 75 ஆண்டு சிறீலங்கா சுதந்திரதினம் 75 ஆண்டுகள் தமிழின அழிப்பு எனும் பதாகையோடு,பேரணி சென்ற வழிகளில் வெளிநாட்டவர்களுக்கான துண்டுப்பிரசுரங்களும் இளையவர்களினால் வழங்கப்பட்டது.

பேரணி மத்திய மாநில அவையின் முன்பாக வந்தடைந்ததும்,அருட்தந்தை திரு. அல்பேர்ட் கோலன் (Koolen)அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி வைக்க,அகவணக்கத்தோடு கவனயீர்பு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சிறீலங்கா சுதந்திரமடைந்த காலமுதல் தமிழர்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட இன அழிப்பானது, 1980களில் தீவிரமடைந்த பொழுது பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்தவகையில் யேர்மனிய நாட்டிலும் மூன்று தலைமுறையாக
தமிழர்கள் வாழ்ந்து வருவதாகவும், இன்றும் தமிழர்கள் மீது தொடரும் கட்டமைப்புசார் இன அழிப்பிற்கு எதிராகவும் இளையவர்கள் அணிதிரண்டு போராடவேண்டுமென அருட்தந்தை அல்பேர்ட் கோலன் (Albert Koolen)அவர்கள் தனது உரையிலே தெரிவித்திருந்தார்கள்.

தொடர்ந்து குர்திஸ் பெண்கள் அமைப்பின் சார்பாக திருமதி.ஆர்ச்சு சோரார் (Arzu Sorar)அவர்கள் அரசு அடக்குமுறைகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்றும், நீதியும் சுதந்திரமும் கிடைக்கும்வரை தமிழர்கள் போராடவேண்டுமென்றும்,தமது அமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்குமென தனது உரையிலே தெரிவித்தார்.
தொடர்ந்து குர்திஸ் அமைப்பைச்சேர்ந்த திரு. ஸ்ரோர்ச் டெனிஸ் (Storz Denis)அவர்கள் கண்டன உரை ஆற்றினார். தமிழர்கள் மீது இன அழிப்பு நடாத்தும் சிறீலங்கா அரசினைக் கண்டிப்பதோடு, தாமும் சிறீலங்கா அரசினது சுதந்திரநாளை கரிநாளென புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார்.

நிறைவாக கூடியிருந்த மக்கள் யேர்மன் மொழியில் கொட்டொலிகளை எழுப்பி “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் “எனும் தாரக மந்திரத்தோடு போராட்டத்தினை நிறைவு செயாதார்கள்.