மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் விதவை கோலத்தில் மனுதாக்கல் செய்ய வந்த நபரால் பரபரப்பு

227 0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். சில சுயேச்சைகள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது. அப்போது சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனை எடுத்து அவர் சாதாரண உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். எதற்காக விதவை கோலத்தில் வந்தேன் என்றால் கரூரில் குடியரசு தின விழா அன்று டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவர்களைவிட மது குடித்து இறந்தவர்களின் விதவை மனைவிகள் எண்ணிக்கை அதிகம். மது குடிப்பவர்கள் எப்பவும் தெளிவாக இருப்பார்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் எனது மனுவை நான் வாபஸ் பெறுவேன் என்றார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.