சென்னை நிறுவனத்தின் கண் மருந்தால் அமெரிக்காவில் 55 பேர் பாதிப்பு- ஒருவர் பலி

129 0

உலகிலேயே அதிகப்படியான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான மருந்துகள் இந்தியாவில் இருந்து தான் அனுப்பப்படுகிறது. குறைந்த விலையில் அதிகப்படியான மருந்துகளை மிக திறமையாக இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்வதே இதற்கு காரணமாகும். ஆனால் சில காலமாக இந்திய மருத்துவ நிறுவனங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் சர்வதேச அளவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் இந்திய மருந்து நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தானது அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னைக்கு தெற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் மருந்து நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த மருந்து கம்பெனி அமெரிக்காவுக்கு கண் சொட்டு மருந்துகளை ஏற்றுமதி செய்தது. இந்த கண் மருந்தால் அமெரிக்காவில் 55 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கண் மருந்தால் ரத்த ஓட்டத்தில் தொற்று ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் ஒருவரது பார்வை நிரந்தரமாக பறிபோய் உள்ளது. கண்களில் நோய் தொற்று ஏற்பட்ட 11 பேரில் 5 பேர் பார்வையை இழந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கண் மருந்துகளை பதப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சொட்டு மருந்துகள் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்று அந்நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்திய சென்னை நிறுவன கண் மருந்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அந்த மருந்து நிறுவனமும் அமெரிக்காவில் தனது கண் சொட்டு மருந்துகளை தானாக முன் வந்து திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் பாதிப்பை ஏற்படுத்திய சென்னை மருந்து நிறுவனத்தில் விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள் நள்ளிரவில் அந்த மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாலை 2 மணிக்கு தான் இந்த விசாரணை முடிவடைந்தது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கண் சொட்டு மருந்து தொகுப்பில் இருந்து மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து திறக்கப்படாத மாதிரிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து திறக்கப்பட்ட மாதிரிகளை மட்டுமே ஆய்வு செய்துள்ளனர். அரசிடம் முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.

அந்த நிறுவனம் மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமத்தை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே அந்த மருந்து நிறுவனம் உற்பத்தியை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த கண் மருந்து இந்தியாவில் விற்கப்படுவது இல்லை.