பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.
பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும் தரப்பினருக்கு வழங்குவதற்காகவே பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்றத்தின் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக தலையிடுகிறார்.நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் செயற்பாடுகளின் தலையிடும் போது பாராளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்.
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது ஜனாதிபதி கட்சி தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை முழுமையாக மாற்றியமைத்தார்.
பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறார்.அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுக் கொண்டு மறுபுறம் பாராளுமன்றத்தின் காலமும்,நிதியும் வீண்விரயமாக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவுப் பெற்ற நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தின் விசேட உரையாற்றுவதற்காக பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் 50 இற்கும் அதிகமான பாராளுமன்ற குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.மீண்டும் குழுக்களை நியமிக்கும் போது பாராளுமன்றத்தின் காலமும்,நிதியும் வீண்விரயம் செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை ஏன் அரச நிதி வீண்விரயமாக கருதவில்லை.
பாராளுமன்ற குழுக்களின் தலைமை பதவிகளை ஆளும் கட்சிகளுக்கு வழங்கும் நோக்கத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயற்பாடுகள் நாட்டில் இல்லாத பிரச்சினைகளை மாத்திரம் தோற்றுவிக்கும் என்றார்.

