ஈழத்து கவிஞர் சேரனுக்கு ‘சர்வதேச கவிதை விருது’

318 0

“O.N.V குருப் நினைவு”  சர்வதேச கவிதை விருதை ஈழத்து கவிஞர் சேரன் பெற்றுக் கொண்டார். இம்மாதம் 17ம் திகதி (17-02-2017) டுபாயில் இவ் விருது வழங்கப்பட்டது.

O.N.V குருப் (Ottaplakkal Neelakandan Velu Kurup) அவர்கள், கேரளாவின் மிக முக்கியமான கவிஞர், பாடலாசிரியர், இலக்கியவாதி, பேராசிரியர், கேரள (மலையாள) இடதுசாரிப் பாரம்பரியத்தின் முக்கியமான தூண். கேரளாவின் முக்கியமான 4 மலையாள பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர்.

O.N.V குருப் இந்தியாவின் மிக உயரிய விருதுகள், கேரளாவின் உயரிய விருதுகள் மற்றும் திரைப்படத்துறையினரால் வழங்கப்பட்ட விருதுகளென பல பெற்று உலகெங்கும் மிக அறியப்பட்டவர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி (13-02-2016) காலமாகியதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவரது பெயரில் “ONV Foundation” நிறுவப்பட்டது.

அவரது முதலாவது நினைவாண்டினை முன்னிட்டு சர்வதேச இலக்கிய விருது (ONV International Literary Award), யுவகவி விருது (ONV Yuvakavi Award) வழங்கப்படன.  அதில் O.N.V குருப் அவர்களின் நினைவாக வழங்கப்பட்ட சர்வதேச கவிதை விருதை கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி( கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியர்) பெற்றுக் கொண்டார்.

O.N.V குருப் நினைவாக ‘சர்வதேச கவிதை விருதினை பெற்ற கவிஞர் சேரன் ஏலவே, கலை-இலக்கிய விபவி நிறுவன விருது, Vanff Center for the Arts விருது, தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருது என்பனவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையைப் பதிவு செய்வதில் கவிஞர் சேரனின் படைப்புக்கள் முன்னிநிற்கின்றன. இவரின் கவிதைகள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், சீனம், ஜப்பானிய மொழிகள் உட்பட 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ரீதியில் நூலாகவும், பல்கலைக்கழகங்களிலும், இலக்கிய அரங்குகளிலும் வாசிக்கபட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை ஆங்கில மொழிபெயர்ப்பில் 4 கவிதைத்தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. என்பது கவனிக்கதக்கது.