இலங்கை பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகின்றனர்!

68 0

இலங்கைக்கு அதிக அந்நிய வருமானத்தை ஈட்டித்தருபவர்களில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் முதன்மையானவர்கள்.

சவுதி அரேபியா, டுபாய், கத்தார், பஹ்ரேன், ஓமான் எனப் பல நாடுகளுக்கு இலங்கைப் பெண்கள் வீட்டு வேலைகளுக்காகச் செல்கின்றனர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளிலிருந்து தமிழ், முஸ்லிம் பெண்கள் அதிகளவில் இந்தப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பல துயரிலும் சிறு வருமானம்

விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! | Tamil Women Are Bought

இறுக்கமான இஸ்லாமிய மத விழுமியங்கள், வீட்டு வன்முறைகள், வேலைப்பளு, சம்பளச் சீரின்மை, உழைப்புச் சுரண்டல், ஓய்வின்மை எனப் பல்வேறு துயரங்களை அனுபவித்தே சிறுதொகை வருமானத்தை இலங்கைப் பெண்கள் பெறுகின்றனர்.

கண்ணீரும், செந்நீருமாகக் கலந்து பெறப்பட்ட அத்தகைய ஊதியத்திலிருந்துதான் இலங்கை தன் வயிற்றையும் நிரப்பிக்கொள்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரிசானா நபீக் என்ற இலங்கைப் பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தை அவ்வளவு இலகுவில் யாரும் மறந்திருக்கமாட்டார்.

ரிசானா வேலை செய்த எஜமானியின் குழந்தைக்கு பால் பருக்கும் போது அது புரைக்கேறியதன் காரணமாக அக்குழந்தை உயிரிழந்தது. இதற்காக ரிசானாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

 

 

விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! | Tamil Women Are Bought

கண்ணுக்கு கண் என்கிற கணக்கில் காணப்படும் முஸ்லிம் நாடுகளது சட்டங்களும் இலங்கைப் பெண்களை மிக மோசமாகப் பாதிக்கின்றன.

இத்தகைய துயரங்களிலிருந்து உறிஞ்சப்படும் கூலியின் ஒரு தொகுதியைக் கொண்டும்தான் இலங்கையின் கஜானா நிரப்பப்படுகின்றது.

பெண்கள் குறித்த அவல பதிவுகள்

இவ்வளவு துன்பங்களுக்கும் முகங்கொடுத்து, இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் குறித்த அவலப் பதிவுகள் அண்மை நாட்களாக ஊடகங்களெங்கும் வியாபித்து வருகின்றன.

ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகின்றனர் என்ற செய்தியின் பின்னர்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேற்கண்டவாறு ஓமான் நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அழைத்துச் செல்லப்பட்ட சர்மினி (27 வயது – பெயர் மாற்றப்பட்டுள்ளது) வவுனியாவின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றைினைச் சேர்ந்தவர்.

தற்போது ஓமான் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவராகத் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் சர்மினி, குடும்ப வறுமை காரணமாகவே இவ்வாறானதொரு அபாயகரமான தொழிற்பயணத்தை ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகின்றார்.

மத்திய கிழக்கிற்கு சென்று உழைத்துப் பொருளீட்டித் தன் கணவருடனும், இரண்டு குழந்தைகளுடனும் சுபீட்சமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு, இந்த வருடத்தின் தொடக்கப் பகுதியிலிருந்து முகவராலயங்களைத் தொடர்புகொண்டதாகக் கூறுகின்றார்.

ஆனால் அந்தப் பயண முடிவில் எஞ்சியது ஊருக்குள் தலை காட்டமுடியாத அவமானம், வறுமை, இரண்டாவது கணவனையும் பிரிந்த நிலை மட்டும்தான் என்கிறார்.

சர்மினியின் நம்பிக்கை

இது தொடர்பில் சர்மினி கூறுகையில், பிரதேச செயலகத்தில் பதிவு செய்துதான் நாங்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகலாம்.

ஆனா ஏஜென்சிக்காரன் சொன்னான், அப்பிடியெல்லாம் மினக்கெட்டால் இப்போதைக்கு டுபாய்க்குப் போக முடியாதெண்டும், தான் சொல்றபடி டுவரிஸ்ட் விசாவில போனால், அங்க போன பிறகு அதை மாத்திக்கொண்டு நாலைஞ்சு, வருசம் வேலை செய்யலாம் எண்டும் வாக்குறுதி தந்தார்.

வேற ஆக்களும் அப்பிடி தனக்கு ஊடாகப் போனதாகச் சொன்னார்.

நானும் என்ர ரெண்டு பிள்ளைகளையும் மனுசனோட விட்டுப்போட்டு, வேற சில பொம்பிளப் பிள்ளயளோட போனன். எங்கள டுபாய்க்குக் கூட்டிப்போறன் எண்டவன், அபுதாபியில் கொண்டு போய்விட்டிப்போட்டு ஆள் மாறிட்டான்.

விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! | Tamil Women Are Bought

அங்கயும் ஒரு முஸ்லிம் ஏஜென்சிக்காரன் எங்கள பொறுப்பெடுத்துக் கூட்டிப்போனான். அவன் தன்ர ஒவ்வீஸ்ல சில காலம் தங்கியிருக்க வேணுமெண்டும், ஆக்கள் ஓடர் பண்ணி கேட்கும்போது ஒவ்வொருத்தரா அனுப்புவன் எண்டும் சொன்னான்.

ஒரு கிழமை நல்லா இருந்தது. சாப்பாடுகள், வசதிகள் எல்லாம் இருந்தது. பிறகு நிலமை மாறினது. எங்கட போன், பாஸ்போர்ட் எல்லாத்தையும் பறிச்சிவச்சிட்டான்.

அவன் வேற ஆம்பிளயளயும் கூட்டிவந்து எங்கள விதம் விதமாக துன்புறுத்தத் தொடங்கினான். ஆக்கள பிரிச்சிப் பிரிச்சி தனித்தனி அறைகளில அடைச்சாங்கள்.

எங்கள ஓமான்காரங்களுக்கு விற்கப் போறதாக சொன்னான். யாழ்ப்பாண பிள்ளையள், தமிழ் பிள்ளையள தனி ரூமுகளில அடைச்சாங்கள்.

கேரளாக்காரன், ஓமான் காரன் யாழ்ப்பாண பிள்ளைகள கூட விலை குடுத்து வாங்குவாங்கள் எண்டுதான் அப்பிடி செய்தாங்கள்.

அங்க இருந்த காலத்தில ஒரு நாளைக்கு ஒரு நேரம்தான் சாப்பாடு. ஒழுங்கா குடிக்க தண்ணி கூட தரமாட்டாங்கள். சவுக்காரம், உடுப்பு எதுவும் தரேல்ல. என்ன கேட்டாலும் மிருகம் மாதிரி அடிப்பாங்கள்.

வார்த்தையில சொல்ல முடியாதளவுக்கு சித்திரவதைப்படுத்துவாங்கள். கரப்பான் பூச்சிகள போத்தல்களில் அடைச்சிவந்து எங்கள் மேல கொட்டிவிடுவாங்கள்.

இந்த சித்திரவதைகள நாங்கள் எங்கட உறவுகளுக்கோ, இலங்கை எம்பஸிக்கோ சொல்லக்கூட வழியிருக்கேல்ல. இதுக்குள்ள எங்களோட இருந்த நிறையப் பேர வித்திட்டாங்கள்.

பல கொடுமைகளின் மத்தியில்

இந்தக் கொடுமைகளுக்குள்ளால தப்பின சிலபேர் எம்பஸிக்கு சொல்லி, மீடியாக்களுக்கு சொல்லி கொஞ்சப் பேர் இப்ப நாடு திரும்பியிருக்கிறம்.

அதிலயும் இப்ப நாட்டுக்கு வந்தபிறகு பெரிய பிரச்சினை எங்களுக்கு. நான் வீட்ட வந்த பிறகு வவுனியாவில ஒரு போராட்டம் நடந்தது. அதுக்கு நானும் போனன். அந்த போராட்டத்தில எங்களுக்கு ஓமான்ல நடந்தத சொல்லி, மிச்ச பிள்ளையளயும் வேகமாக கூட்டிவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேணும் எண்டு பாதிப்பட்ட நாங்கள் சொன்னம்.

விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! | Tamil Women Are Bought

அந்தப் போராட்ட இடத்தில, ஓமான்ல இருந்து திருப்பி வந்த பிள்ளையள் எல்லாரும் தங்களுக்கு நடந்த கொடுமைகள எங்களுக்குள்ள கதைச்சிக்கொண்டம். நானும் எனக்கு நடந்த கொடுமைகள சொல்லிக்கொண்டிருந்தன். (அதை நான் உங்களுக்கு கூட சொல்லயில்ல)

அதை யாரோ எனக்கு தெரியாமலே வீடியோ எடுத்து நெற்றில விட்டிற்றினம். அதை எப்பிடியோ என்ர கணவர் பார்த்திட்டார். அன்றைக்கு வீட்ட வந்து சண்டை பிடிச்சிப்போட்டு, போன் எல்லாம் உடைச்செறிஞ்சு போட்டு போனவர் இன்னும் வீட்ட வரயில்ல.

இப்ப நானும் ரெண்டு பிள்ளயளும்தான் தனிச்சிருக்கிறம். எங்கள பார்த்துக்கொள்ள யாருமில்ல. இனிமேலுக்கு எங்கள மாதிரி யாரும் ஏஜன்ஸிக்காரங்கள நம்பி தங்கட வாழ்க்கைய நாசமாக்கிக்கொள்ளக்கூடாது.

சர்மினியின் கதை ஒமானிலிருந்து திரும்பிய ஒரு பெண்ணுடையது மட்டும்தான். இன்னமும் பல நூறு தமிழ் பெண்கள் மீட்கப்படாமலேயே ஓமானில் காத்திருக்கின்றனர்.

 

ஜெரா