பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் செயலிழப்பு

71 0

பாராளுமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் இதுவரை செயற்பட்டுவந்த கோப், கோபா குழு உட்பட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் செயலிழக்கப்படுவதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதன் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்கிகப்பட்ட பின்னர் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படு, அந்த குழுக்கள் மீண்டும் அமைக்கப்படவேண்டும்.

அதேபோன்று பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருந்தபோதும் பாராளுமன்ற இணைப்புக் குழு, உயர் பதவிகள் பற்றிய குழு, விசேட குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தொடர்ந்து செயற்படும். அரசியலமைப்பு சபையும் அவ்வாறே செயற்படும் எனவும் படைக்கல சேவிதர் தெரிவித்தார்.

அத்துடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2020 ஆகஸ்ட் 20 முதல் 2021 டிசம்பர் 12 வரையும், இரண்டாவது கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 முதல் 2022 ஜூலை 28 வரையும் இடம்பெற்றது.

அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த 27ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரும் வரை பாராளுமன்றம் 58 நாட்கள் கூடியிருந்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.