மின்சாரசபை 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது!

73 0

இலங்கை மின்சாரசபை இதுவரையில் 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது. இதில் மிக அதிக தொகையான 112 பில்லியன் ரூபாவினை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் துண்டிப்பின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சாரசபை, மின் உற்பத்திக்காக முழுமையான நீரைப்பயன்படுத்தியது.

இதன் காரணமாக கடந்த ஆண்டின் மத்தியில் 4 – 6 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டது.

பொருளாதார நெருக்கடிகள், பணப் புழக்க முகாமைத்துவ நெருக்கடி என்பவை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் காரணமாக அமைந்தன.

சில அரசியல் உள்நோக்கம் கொண்ட தரப்பினரால் எரிபொருள் விநியோக தட்டுப்பாடு மற்றும் மின் விநியோக தட்டுப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாண்டு தடையற்ற மின் விநியோகத்திற்கான தெளிவான செயற்திட்டத்தினை இலங்கை மின்சாரசபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் ஏனைய உரிய தரப்பினருக்கும் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்தது.

இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய மத்திய வங்கிக்கும் , திறைசேரிக்கும் சுமையாக இல்லாதவாறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கை மின்சாரசபை , பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படுத்தியுள்ள கடன் சுமையால் மின் உற்பத்திக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலவுகின்றது.

அதற்கமைய இலங்கை மின்சாரசபையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 112 பில்லியனும் , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்குனர்களுக்கு 40 பில்லியனும் , சூரிய சக்தி வழங்குனர்களுக்கு 4 பில்லியனும் , தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 80 பில்லியன் ரூபாவும் , பெப்ரவரிக்கான நிலக்கரி இறக்குமதிக்கு 35 பில்லியனும் , மாதாந்த வங்கி கடன் வட்டிக்கு 10 பில்லியனும் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் காஞ்சன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.