சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை- வைத்தியர் சமல் சஞ்சீவ

142 0

சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இன்மையால் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதில் நோயாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மலர் மாலை அணிவிப்பதற்காக 98,000 ரூபாயையும் தேசிய கீதத்தை இசைப்பதற்கு 15 இலட்சம் ரூபாயையும் மதிப்பீடு செய்யப்பட்ட எமது நாட்டிலேயே சிறுநீரக நோயாளர்களுக்கான குறுதிச் சுத்திகரிப்பு செய்வதற்கான வசதிகள் இல்லாமல் போயுள்ளது.

சுதந்திர தினத்தின்போது டி.எஸ்.சேனாநாயக்கவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதற்கு 95,000 ரூபாயும் தேசிய கீதத்தை இசைப்பதற்கு 15 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த யோசனையானது ஜனாதிபதியின் கவனத்துக்கு செல்லும்வரை குறித்த மதிப்பீட்டை செய்த அதிகாரிகள், அதிகாரிகள் குழுவினர் என்ன செய்தனர் என்றே நாம் கேட்கின்றோம்.

இந்த நிலைமையே கடந்த பல வருடங்களாக எமது நாட்டில் நிலவி வருகின்றது.

ஏனெனில் எமது நாட்டில் முறையற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக கிடைக்கும் பாரியளவிலான தொகைகள் இடையில் இருக்கும் அதிகாரிகளினூடாக வீணடிக்கப்படுகின்றது.

அவ்வாறான யோசனைகளை முன்வைத்த அதிகாரிகளுக்கு எதிராகவோ, அவ்வாறான மதிப்பீட்டை செய்த அதிகாரிகளுக்கு எதிராகவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று தெரியவில்லை.

எனினும் மலர் மாலை அணிவிப்பதற்காக 98,000 ரூபாயையும் அதேபோன்று தேசிய கீதத்தை இசைப்பதற்கு 15 இலட்சம் ரூபாயையும் மதிப்பீடு செய்த எமது நாட்டில் தற்போதைய நிலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குறுதிச் சுத்திகரிப்பு செய்வதற்கான வசதிகள் இல்லாமல் போயுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான குறுதி சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நோயாளர்கள் 2, 3 இலட்சம் ரூபாயை செலவழித்து தனியார் வைத்தியசாலைகளில் குறுதி சுத்திகரிப்பை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலையின் வசதிகள் இன்னும் அபிவிருத்தியடையாததே இதற்கு பிரதான காரணமாகும்.

பொலன்னறுவை மாவட்டத்தில் பாரியளவிலான சிறுநீரக நோய்க்கான வைத்தியசாலை அமைக்கப்பட்டாலும் அந்த வைத்தியசாலையில் சகல வளங்களும் பெற்றுக்கொடுக்காததன் காரணமாக அந்த வைத்தியசாலையும் செயலிழந்தே காணப்படுகின்றது.

அதேபோன்று கராப்பிட்டிய, கொழும்பு, மாளிகாவத்தை, ராகம, கண்டி, அனுராதபுரம் உள்ளிட்ட சகல பிரதேங்களிலும் இன்று சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் இல்லாததன் காரணமாக பாரிய அசௌகரியங்களை நோயாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.