கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மரணம்: 5 பொலிஸார் கைது

229 0

பேலியகொடை பொலிஸ் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 41 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் நான்கு கான்ஸ்டபில்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ம் திகதி காரொன்றை கொள்ளையிட்ட விவகாரம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் கடுவலை – நவகமுவ பகுதியை சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, நேற்று மாலை பேலியகொடை பொலிஸார், சந்தேகநபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்துள்ளனர். பின்னர், துப்பாக்கி இருக்கும் இடத்தை காட்ட சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட வேளை, அவர் தப்பி ஓட முற்பட்டதாகவும், இதன்போது திடீரென சுகயீனமுற்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சந்தேகநபர் பலியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், உயிரிழந்தவரின் உடல் அதிகமாக நசுக்கப்பட்டுள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய அதிக இரத்தப் போக்கு அல்லது உடலில் நீர் குறைவடைந்தமையே மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விடயம் குறித்து விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.