பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்- மைத்ரிபால

317 0

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று நடைபெற்றது.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் பழைய மாணவராக இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் வரவேற்றனர்.

நவீன மயப்படுத்தப்பட்ட பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் நீச்சல் தடாகம் மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் ஆகியவற்றை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.

பாடசாலையின் எட்டு சாரணர்களுக்கு ஜனாதிபதி சாரணர் பதக்கங்களையும் அணிவித்தார்.

2017ஆம் ஆண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்ததுடன், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய அலுவலகத்தையும் இதன்போது திறந்து வைத்தார்.

நிகழ்வில் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, வடமேல்மாகாண அமைச்சர்கள், பாடசாலையின் அதிபர் ரவிலால் விஜயவன்ச உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரைநிகழ்த்திய ஜனாதிபதி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையிலான சூழலை கட்டியெழுப்புவது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

அதற்கு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், ஒழுக்காற்று சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏனைய நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொள்ளும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்களினதும் நாட்டினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துவத்துடனும் ஒரு சிறந்த மாணவராக தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உலகுக்கு ஒரு முன்மாதிரியான மாணவ தலைமுறையாக இருக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டாகும்போது பொலன்னறுவை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளிலும் பௌதீக தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி, தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தமது கோரிக்கையின் பேரில் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பில் பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள நல்லிணக்க பாடசாலையின் நிர்மாணப்பணிகளை இவ்வருடம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் அனைத்து சிறுநீரக நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் இவ்வருடம் ஜூன் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.