அரசுப் பள்ளி மாணவி எழுதிய ‘ஓட்டுப்போட வா’ விழிப்புணர்வு பாடல்

71 0

மதுரை மேலூரில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சுபலட்சுமி எழுதிய ‘ஓட்டுப்போட வா’ என்னும் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி உதவித் தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ஆயிஷாபேகம் முன்னிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனையொட்டி, பிளஸ் 2 கணினி அறிவியல் பிரிவு மாணவி சுபலெட்சுமி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து ‘ஓட்டுப் போட வா’ எனத் தொடங்கும் பாடலை ‘தேனிலவு’ பாடத்தில் ‘பாட்டுப்பாட வா’ என்ற மெட்டில் எழுதியுள்ளார்.

‘ஓட்டுப்போடவா, உரிமை காக்க வா, வறுமை ஒழிக்க வா, வாக்களிக்க வா’ என்ற மெட்டில் இசையமைக்கப்பட்டு குறுந்தகடு தயாரானது. அதனை உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவி சுபலட்சுமி வெளியிட, அப்பள்ளி தமிழாசிரியை ஆர்த்தி பெற்றுக்கொண்டார். முடிவில், கணினி ஆசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.

மாணவி சுபலட்சுமி, சில வாரத்திற்குமுன் சென்னை புத்தகத் திருவிழாவில் நடந்த கவிதைப் போட்டியில் ‘வரதட்சிணை கொடுமை’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக நற்கவிஞர் பட்டய விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.