சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

278 0

சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலமாக பொலன்னறுவை நீதிமன்ற அலுவலகங்களில் இருந்து வந்த இடப்பிரச்சினைக்கு தீர்வாக இந்த புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம், ஆவண காப்பகம், தொழில் பிணக்குகள் சபை, சட்டத்தரணிகள் அலுவலகம் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட வகையில் இக்கட்டிடத் தொகுதி அமைக்கப்பட உள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, வடமேல் மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, பக்கச்சார்பற்ற சுயாதீனமும் முன்மாதிரியுமான நீதி முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாட்டின் நீதித்துறைக்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத வகையில் செயற்பட முடிந்திருப்பது தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.

நீதித்துறையில் உள்ள அனைவரும் சுதந்திரமாகவும் திருப்தியுடனும் தமது கடமைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்பும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவனின் சேவைகளையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.