கறுப்பு வாரத்தின் முதல் நாளில் கடும் எதிர்ப்புகள்

245 0

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தொழிற்சங்கங்களினால் நேற்றையதினம் (23) பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

23ஆம் திகதி ஆரம்பிக்கும் வாரம் கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் வல்லுனர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதற்கு ஆதரவளிக்கும் வகையில், வைத்தியர்கள் பலர் கறுப்பு பட்டி அணிந்து தமது கடமைகளுக்கு சமுகமளித்திருந்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கறுப்பு வாரத்தை நேற்று காலை ஆரம்பித்து வைத்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், மருந்துப் பற்றாக்குறையை தீர்க்குமாறு கோரி மனுவொன்றில் கையொப்பம் திரட்டியது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி கறுப்பு வாரத்துக்கு ஆதரவு தெரிவித்த வங்கி ஊழியர்களுகம் கறுப்பு ஆடைகளை அணிந்து கடமைகளுக்கு சமுகமளித்திருந்தனர்.

இதேவேளை, வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக நேற்று (23) நடைபெற்றது.

திருடர்களை வைத்து வரி கட்டும் ரணில் ராஜபக்ஷவை ஒழிப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் இடம்பெற்ற நிலையில், போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள வைத்திய சாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் 4 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பணவீக்கம், போக்குவரத்துக் கொடுப்பனவு, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், இலவச சுகாதார சேவைகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, அதிகரித்துள்ள வங்கி வட்டி வீதத்தைக் குறைத்தல், கடுமையான ஊழியர் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி சேவை சங்கத்தின் தலைவர் அநுராத நிராஜ்,  “வரி அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு வாரமாக இதனை அறிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். அந்த வகையில் வரி அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து இன்று சேகை்கு வந்திருக்கிறோம்” என்றார்.
“எனவே, எந்தவிதமான அடிப்படையுமின்றி  வரியை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.