அரசாங்கத்தின் நோக்கத்தினை செயற்படுத்துவதற்காகவே தேர்தலின் போது பாதுகாப்பினை வழங்க முடியாது என்று பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார்.
அரசியலமைப்கு ரீதியாக அவரால் அவ்வாறு கூற முடியாது. யுத்த காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றன என்பதை பொலிஸ்மா அதிபர் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடளாவிய ரீதியில் 339 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றோம். வடக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 336 தொகுதிகளில் நாம் போட்டியிடுகின்றோம்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிக கேள்வி காணப்படுகிறது. காரணம் எம்மால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் இதனை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது.
அரசியலமைப்பு ரீதியில் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான வழிமுறை அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை. எனவே நிதி தட்டுப்பாடு, பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் , எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட காரணிகளைக் குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தேர்தலின் போது பாதுகாப்பினை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு அரசியலமைப்பு ரீதியாக பொறுப்புக்கள் உரித்தாக்கப்பட்டுள்ளன. எனவே அரசாங்கத்தின் தேவைகளுக்காக பாதுகாப்பினை வழங்க முடியாது என்று அவரால் கூற முடியாது.
காரணம் நாட்டில் வடக்கிலும் , தெற்கிலும் யுத்தமும் மோதல்களும் இடம்பெற்ற காலத்தில் கூட தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தேர்தல் கடமைகளுக்காக பாதுகாப்பை வழங்க வேண்டியது பொலிஸ்மா அதிபரின் தவிர்க்க முடியாத கடமையாகும் என்றார்.

