பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

191 0

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்கள் சிலர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அமைந்துள்ள கட்டடத்திற்குள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பது பற்றியும் , அந்த சந்தர்ப்பத்தில் தாம் அங்கு இருப்பதை எவ்வாறு அறிந்து கொண்டார்கள் என்பது பற்றியும் ஆராயுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் உதேனி விக்கிரமசிங்க மற்றும் அதன் உறுப்பினரான பேராசிரியர் மொஹான் சமரநாயக்க ஆகியோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் , தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் குறித்த உறுப்பினர்கள் கடந்த 22 ஆம் திகதி கொள்ளுபிட்டி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி – புனித மைக்கல் வீதியில் உள்ள இந்த கட்டடத்திற்குள் நுழைந்த சிலர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரித்து அச்சுறுத்தியதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் சிலரும் சம்பவ இடத்தில் காணப்பட்டதோடு , அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அவர்களும் அறிவர் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்று நாம் அங்கு வருகை தந்திருக்கின்றோம் என்பதை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் மாத்திரமே அறிவர். இந்த தகவலை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் எவ்வாறு அறிவார்கள் என்றும் , ஊடகங்களையும் அழைத்துக் கொண்டு அவர்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தது எவ்வாறு என்பது தொடர்பிலும் துரிதமாக கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் குழுவொன்று மக்களைத் தூண்டிவிட்டு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸாரிடமும் நிதியமைச்சிடமும் இரு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.