வேட்பாளர் பட்டியல் இறுதிநேரத்தில் மாற்றம் – விசாரணை மேற்கொள்ள வேண்டும்- ராம்

250 0

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பது அதிருப்தி அளிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சி.வை.பி.ராம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்புமனு தயாரிப்பின்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் என்னால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள்கூட இறுதி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளன. எனவே இது சம்பந்தமாக கட்சி தலைமைப்பீடம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முஜிபுர் ரஹ்மான் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்திக்காக கடுமையாக உழைத்துவந்த உறுப்பினர்கள் பலர் இருக்கையில், வேட்புமனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணி என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.  என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியில்  நீண்டகாலமாக இருந்துவந்த உறுப்பினர்களுக்கு வாப்பளிக்காமல், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து எனது கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன்.