பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள்! ஜாட்சன் பிகிறாடோ

221 0

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் சுமார் 32 வருடங்களுக்கு மேலாக மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை தமது சொந்த காணிகளில் மீள் குடியேற்றுவதற்கு அரசிடம் வலியுறுத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.

முகாமிலுள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நேற்றைய தினம் (22. 01.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காண நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காண நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது உரையாற்றி ஜாட்சன் பிகிறாடோ,

யாழ்ப்பாணம் வலி வடக்கு பொலிகண்டி பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வலி வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுமார் 32 வருடங்களுக்கு மேலாக 6 நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றீர்கள்.மழைக்காலங்களில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் முகாம்களில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதை நாங்கள் நேரடியாக அவதானித்துள்ளோம்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓர் உதவியாகவே நாங்கள் தொடர்ந்து நிவாரண உதவியை முன்னெடுத்து வருகிறோம். 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

உங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்.

மக்களினுடைய காணிகளை ஏன் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த வேண்டும்? 1990 ஆம் ஆண்டு மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த பின் இன்று வரை அந்த மக்களின் தனியார் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர் பாதுகாப்பு யாருக்கு? மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய அரசு மக்களின் காணிகளை பிடித்து அதில் முகாம் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இன்று மக்களை முகாம்களில் தவிக்க விட்டுள்ளது.

எனவே, முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அரசு அவர்களின் சொந்த நிலங்களில் மீளக் குடியம ர்த்தி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.