சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்! – -அகரமுதல்வன்-

604 0

zeid-pressசர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள் தமக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றமையும் இவ்வுலகம் அறிந்ததே. “சர்வதேச நீதி” எனும் இந்தச் சொல்லாடல் உலக வல்லாதிக்கத்திற்கு ஆதரவானதாகவே எமது விடயத்தில் மாறியிருக்கிறது. ஐ.நா எனும் அமைப்பு நீதிக்கான உலக அமைப்பாக பெயரளவில் இருந்து வருவதனை இனப்படுகொலைக்காலத்தில் கண்டு கொள்ளமுடிந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இலங்கை அரசும் சிங்கள மக்களும் மட்டும் கிடையாது. இதற்கு ஒட்டுமொத்த உலகமும் பாத்திரப்பட்டவர்கள். உலகத்தின் அவமானமான மவுனத்தின் தந்திரத்திற்கு இப்படுகொலையில் பாரிய பங்குண்டு. இலங்கை அரசை இனப்படுகொலைக்குப் பின்னரும் பாதுகாத்து வரும் ஒவ்வொரு நாடுகளும் இலங்கை அரசைப் போல் நேரடிக் குற்றவாளிகள் தான்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” இந்த வாக்கியம் அரசியல் ரீதியான வாக்கியமட்டுமல்ல, ஒரு இனப்படுகொலைக்கான சம்மதத்தை வாங்கிய வாக்கியம். முள்ளிவாய்க்காலில் 21ம் நூற்றாண்டின் மானுடம் நிர்வாணமாய் அவமானமாக்கப்பட்ட போது சேர்ந்து சொன்ன வாக்கியம்.

இந்த வாக்கியத்தின் மூலம் எல்லாம் அமுக்கப்பட்டு சிதிலம் சிதிலமாய் தமிழீழ மக்கள் கொல்லப்பட்ட போது முல்லைக் கடலில் ரத்தம் உப்பியிருந்தது. இந்த மாபெரும் இனப்படுகொலைக்கு இலங்கை அரசும் சிங்கள மக்களும் எப்படி பொறுப்பானவர்களோ அதேயளவு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக சர்வதேச சமூகம் இருக்கிறது .உலக அமைதி என்று நம்பப்படுவது இந்த இடத்தில் ஐ.நாவால் கைவிடப்பட்டது.

தமிழ்மக்களின் உரிமைகளுக்காய் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் கொடூரமான பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து அவர்களை அழித்தொழிக்கும் மூர்க்க யுத்தத்தை தமிழ் மக்கள் மீது திட் டமிட்டு நடத்தியது இலங்கை அரசு. புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கிறார்கள் என இலங்கை அமைச்சர்கள் அய்நாவிடமும் சர்வதேச ஊடகங்களிடமும் முறைப்பாடு செய்கிற போதெல்லாம் போரை இன்னும் கோரமானதாக மாற்றிக்கொண்டார்கள் . அப்பாவி பொதுமக்களை யுத்தத்தில் கொல்லக் கூடாது எனவும் அதே மக்களை புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருக்க கூடாது எனவும் ஐ.நா தனது மவுனத்தை மறந்து வாய் திறந்தது .

இந்த இனப்படுகொலையின் அனைத்துவிதமான அவலங்களுக்கு பின்னர் ஐநாவின் மவுனமும் இலங்கை அரசுடன் அது கையாண்ட மென்மையான போக்கும் காரணமாகி இருக்கிறது .இனப்படுகொலைக்கு பின்பான காலங்களில் ஐநா வெளியிட் ட பல்வேறு அறிக்கைகளில் மேற்சொன்ன வகையில் ஐநாவே குறிப்பிட்டிருப்பது கவலைக்கிடமானது . “பான்கீ மூனின் ருவாண்டோ” என்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மேற்குலக மனிதவுரிமை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொல்லப்படட அப்பாவி மக்களுக்கு இந்தமாதிரியான ஒப்புதல்களும் ஒப்பீடுகளும் ஆறுதலைத் தராது .ஆனால் இனப்படுகொலைக்கு பின்னரேனும் இலங்கைத் தீவில் இனப்படுகொலை நிகழ்ந்திருப்பதை இவ்வாறான அறிக்கைகளின் மூலம் சர்வதேச நாடுகளில் இலங்கை அரசாங்கம் அம்பலப்பட்டுள்ளனர். காலம் காலமாய் தமிழ் மக்கள் மீது இலங்கையின் ஆடசியாளர்கள் நிகழ்த்தி வந்த இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சத்தை தொட்டது. அப்பாவி மக்களை இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் மட்டுமே கொன்றொழித்தது என எழும் கருத்துக்கள் அபத்தம் நிறைந்தவை .

2009ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து மே 18ம் திகதி வரை நாளும் கொல்லப்படட அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நிகழ்த்திய இலங்கை அரச படைகளின் திதிட்டமிட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்த முடியாத ஐ.நா உலகத்தின் அமைதி குறித்து அதன் பிறகும் பேசி வருவது அமைதிக்கு பங்கமானது.

இறுதி யுத்தம் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக் களத்தில் நிகழந்த மானுட அவலங்கள் குறித்து பேசுகிற பொழுது அரசு நிகழ்த்திய படுகொலைகளோடு புலிகள் இயக்கம் மீதும் மனிதவுரிமை மீறல் குற்றச்ச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலவந்த ஆட்சேர்ப்பு மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல விரும்பிய அப்பாவிப் பொதுமக்களை தாக்கியது போன்ற குற்றச்ச்சாட்டுக்கள் பெரிதளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மே 18ம் திகதி வரையிலும் முள்ளிவாய்க்காலில் மிஞ்சியிருந்தவர்களில் நானும் ஒருவன். இலங்கை அரசு புலிகளின் கட்டுபாட்டுப்பிரதேசத்தில் இருந்து ஐ.நா பணியாளர்களை வெளியேறச் சொன்ன நாளிலிருந்து அந்தக் களத்தின் சாட்சியாக அதே நிலத்தில் மிஞ்சப்போகும் மக்கள் தான் இருக்க போகிறார்கள் என எண்ணினேன். நான் உயிர் தப்புவேன் என எண்ணியது கிடையாது. விரும்பியதும் கிடையாது.

ஐ.நா பணியாளர்களை வன்னியில் இருந்து வெளியேறச் சொன்ன இலங்கை அரசின் அறிவிப்பு மக்களைக் கொன்றொழிக்கும் அதிதீவிரத்தின் உச்சத்திலிருந்ததை அறிய முடிந்தது. ஐ.நா தனது பணியாளர்களை வெளியேறச் சம்மதித்த அந்தபி புள்ளியில் ஐ.நா இனப்படுகொலையை ஆமோதித்துவிட்டது என விளங்கிக்கொள்ள முடிந்தது. புலிகள் எங்களைக் காப்பாறுவார்கள் என மக்கள் நம்பியதை போல யாரும் மிஞ்சமுடியாது என்கிற நம்பிக்கை வன்னியில் இருந்து வெளியேறிய ஐ.நா பணியாளர்களிடம் இருந்தது.

இலங்கை அரசு உலகில் யாருக்கும் செவிசாய்க்காத அறம் பிறந்த படுகொலைகளை நிகழ்த்த திட்டமிட்ட பொழுது அதற்கு ஆதரவு வழங்கிய ஐ.நா சர்வதே ச நீதிக்கான உலக நாளை கடைப்பிடிப்பது எவ்வளவு கொடுமையானது. முள்ளிவாய்க்கால் தமிழர்களை இனப்படுகொலை செய்த இடம் மட்டுமல்ல. அது இந்த நூற்றாண்டின் அமைதியை சுக்குநூறாக்கிய இடம் . அது தமிழர்களுக்கு சிங்களர்களால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை . சர்வதேசத்தால் தமிழர்களின் பிணங்களால் வடிவமைக்கப்பட்ட இன்னொரு ருவாண்டா. அது பான் கீ மூனின் ருவாண்டா-

-அகரமுதல்வன்-