மலையக மக்கள் ஒருபோதும் தேர்தல் நடத்துமாறு கோரவில்லை

137 0

வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப குறுகிய காலத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ள ஜனாதிபதிக்கு இன்னும் சிறிது காலம் வழங்கவேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் மலையக மக்கள் ஒருபோதும் தேர்தலை கோரவில்லை  என தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உப தலைவரும் ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து கோப்பி பயிரிடுவதற்கு வந்ததன் மூலம் இந்திய வம்சாவளி மலையக மக்களின் இலங்கை வருகை ஆரம்பமானது. அவ்வாறு எமது மக்கள் வருகை தந்து இவ்வருடத்துடன் 200 வருடங்களாகின்றன. இலங்கையின் பொருளாதாரத்துக்கு எமது மக்கள் பெரும் பங்களிப்பு வழங்கினர். நாட்டின் மேம்பாட்டுக்கு உந்து சக்தியாக இருந்தனர். இலங்கையின் பெயரை சர்வதேச மயப்படுத்தினர்.

இந்நிலையில் மலையக மக்களின் பங்களிப்பை பாராட்டி, அவர்களை கௌரவிப்பதற்காக விழா நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி ஒரு தேயிலை தொழிலாளியின் பிள்ளை என்ற வகையில் நான் பெருமைபடுகின்றேன். எமது மக்களை கௌரவிப்பதற்கு தீர்மானித்த ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வங்குராேத்து அடைந்த நாட்டை ஐந்தரை மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி  பொறுப்பேற்றார். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் காரணமாக அன்று இருந்த வரிசை யுகம் இன்று இல்லை. நாடு இயல்பு நிலையை நோக்கி பயணிக்கின்றது. சுற்றுலாத்துறை மீண்டெழ ஆரம்பித்துள்ளது. ஊவா,  வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படிப்படியாக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார். அதனால் பொருளாதார பிரச்சினைக்கு முழுமையாக தீர்வுகண்டு நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதிக்கு இன்னும் சில காலம் வழங்கப்படவேண்டும். அவரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும்.

இந்நிலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. தேர்தல் என்பது மக்களின் உரிமை. அது பாதுகாக்கப்படவேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தற்போதுள்ள நிலைமையில் தேர்தல் தேவையில்லை என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம். மாகாணசபைகள் போன்று உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படவில்லை. அவை இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. தேர்தல் நடத்துவதாக இருந்தால் அதற்கு பத்து பில்லியன் ரூபாவரை செலவாகும். மூன்று நாட்களில் இந்த பணத்தை அச்சிடமுடியும் என  பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்கமுடியாது. கடன் வாங்குவதாலும், பணம் அச்சிடுவதாலும் நெருக்கடி நிலைமை மேலும் உக்கிரமடையும். கடன் வாங்கி இவ்வாறு செயற்பட்டதால்தான் நாடு இந்நிலைமையில் உள்ளது.

அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் மலைய மக்கள் தற்போதைய நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்துக்கொள்ள தேவையான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றே தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் தேர்தல் நடத்தவேண்டும் என கோரியதில்லை  என்றார்.