ஐக்கிய தேசிய கட்சி பாரிய கூட்டணியாக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை

155 0

னாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளித்துவரும் அனைத்து பிரிவினரையும் இணைத்துக்கொண்டு, பரந்துபட்ட கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த தேர்தலில் மக்கள் எங்களை ஆதரிப்பர் என ஐக்கிய தேசிய கட்சி திவுலபிட்டி தொகுதி அமைப்பாளர் கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய கூட்டணியாக தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு உறுதியாக இருந்து, அவற்றை ஏற்றுக்கொள்கின்ற, ஜனாதிபதியின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்ற அனைத்து குழுக்களையுமே நாங்கள் கூட்டணியாக கருத்துகின்றோம்.

எதிர்காலத்தில் வரிசை யுகத்தை காண்பதற்கு விருப்பம் இல்லாத, சிறந்த பொருளாதார கட்டமைப்பொன்று ஏற்படுவதற்கு விரும்புகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும், இணைந்துகொள்ள விருப்பமுள்ள அனைத்து மக்கள் மற்றும் கட்சிகளை இணைத்துக்கொண்டு முன்செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதனால் நாங்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தேர்தலுக்கு அச்சப்பட்டதில்லை. பயமின்றி எந்த தேர்தலுக்கும் முகங்கொடுப்போம். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த தேர்தலில் மக்கள் எங்களை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அதனை அதன் தலைவர் ஒரு பக்கமாகவும், ஏனைய உறுப்பினர்கள் வேறொரு பக்கமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதனால் தேர்தல் நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருந்தால், அது நாட்டு மக்களுக்கும் தேர்தலில் கலந்துகொள்பவர்களுக்கும் நல்லது. ஆனால், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் முரண்பாடு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, நாட்டின் தற்போதுள்ள நிலையில், மக்கள் மீது ஆதரவு இருக்குமானால், எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தீர்மானிக்கவேண்டும். அதேபோன்று தேர்தல் ஒன்று இடம்பெற்றால் எங்களுடன் பரந்துபட்ட கூட்டணியொன்று உருவாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் எங்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரிபால சிறிசேன அணி மற்றும் மஹிந்த அமரவீர அணி எங்களுடன் கலந்துரையாடி வருகின்றன. யார் எங்களுடன் இணைந்துகொள்ளப் போகிறார்கள் என்பதை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் என்றார்.