மைத்திரி, விமல், டலஸ் ஆகியோரின் அரசியல் கூட்டணி இவ்வாரம் உதயம் ?

65 0

 தலைமைத்துவ சபை ஊடான பரந்துபட்ட அரசியல் கூட்டணியை மைத்திரி, விமல் மற்றும் டலஸ் அணியினர் எதிர்வரும் வாரம் ஸ்தாபிக்கவுள்ளனர்.

புதிய அரசியல் கூட்டணியின் பெயர், கூட்டணியின் சின்னம் தொடர்பான தீர்மானங்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினர் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அடிப்படையில் போட்டியிட பல்வேறுக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான தரப்பினர் கூட்டணி அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

ஒரு அரசியல் கட்சி தலைமையில் கூட்டணியை அமைக்காமல் மூன்று கட்சிகளை ஒன்றிணைத்த வகையில் தலைமைத்துவ சபை ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியின் நிறைவேற்று சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 40 சதவீத அங்கீகாரத்தையும்,சுதந்திர மக்கள் சபைக்கு 30 சதவீத அங்கீகாரத்தையும்,மேலவை இலங்கை கூட்டணிக்கு 30 சதவீத அங்கீகாரத்தையும் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி,விமல்,மற்றும் டலஸ் தலைமையிலான கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயர் சூட்ட ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னர் கூட்டணி தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்க மைத்திரி,விமல் மற்றும் டலஸ் தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இவர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆலோசனை பெற்றுள்ளார்கள்.

இவ்வாறான பின்னணியில் தலைமைத்துவ சபை ஊடான அரசியல் கூட்டணி எதிர்வரும் வாரம் அமைக்கப்படும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.