மார்ச் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நிமால் புஞ்சிஹேவா

189 0

அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதைப் போன்று தேர்தல் ஆணைக்குழுவிற்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எவ்வித பிளவுகளும் இல்லை. மார்ச் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் , எனவே இது தொடர்பில் ஆலோசனைகளைப் பெறுவதற்கு சட்டமா அதிபரை நாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவிய போதே ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா கேசரி வார வெளியீட்டுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதைப் போன்று தேர்தல் ஆணைக்குழுவிற்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் உறுப்பினர்கள் ஐவரினதும் இணக்கப்பாட்டுக்கமையவே முன்னெடுக்கப்படுகிறது. தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஐவரும் இணைந்தே முன்னெடுத்து வருகின்றோம்.

அதற்கமையவே வேட்புமனு தாக்கலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. ஐவரும் அதில் கையெழுத்திட்டுள்ளோம். வர்த்தமானியில் கையெழுத்திட்டதன் பின்னர் அதனை மீளப் பெறுவதாக எவரும் கூறப் போவதில்லை. அவ்வாறு கூறவும் முடியாது.

எனவே உரிய நேரத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதை இலக்காகக் கொண்டு அதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம்.

அவ்வாறு தற்போது எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கான நிதி தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வருகிறது. தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி காணப்படுவதாக அரசாங்க தரப்பிலிருந்து இதுவரையில் எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.

வேட்புமனு தாக்கல் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலுக்கான தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். அதற்கமைய மார்ச் முதல் வாரத்தில் தேர்தலை எதிர்பார்க்க முடியும். எனினும் அதனை உறுதியாகக் கூற முடியாது என்றார்.