உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளுக்கும் தற்போதைய நிலையில் பிணையளிக்க முடியாது என சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் வியாழக்கிழமை ( ஜன. 05) அறிவித்தது.
வியாழக்கிழமை (ஜன.05) இந்த விவகாரம் குறித்த வழக்கு இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இது அறிவிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிசாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு, போகம்பறை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் அவர்களில் 24பேர் அழைத்து வரப்பட்டனர்.
நேற்று, நீதிமன்றில் 14 ஆவது பிரதிவாதி ஆஜர்ச் செய்யப்படாத நிலையில், அவர் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், அவர் தொடர்பில் பூரண மருத்துவ அறிக்கையை மன்றில் முன்னிலைபப்டுத்த ட்ரயல் அட்பார் நீதிமன்றம், உத்தர்வுஇட்டிருந்த நிலையில் அவ்வறிக்கை மன்றில் முன் வைக்கப்பட்டது.
அத்துடன் 13 ஆவது பிரதிவாதி குறித்த மன நல மருத்துவ அறிக்கையை முன் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், ராகம போதனா வைத்தியசாலையின் விஷேட மன நல மருத்துவ நிபுணர் அருனி அபேசிங்கவின் அறிக்கை மன்றுக்கு கையளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 13 ஆவது பிரதிவாதி குறித்து முடிவுக்கு வர அவரை மன நல பகுப்பாய்வு விஷேட நிபுணர் ஒருவர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தி அவதானிப்புக்களைப் பெற வேண்டும் எனவும் அதன் பின்னரே அவர் குறித்து அறிக்கையளிக்க முடியும் என மன நல வைத்திய நிபுணர் அருனி அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி சிறப்பு மன நல பகுப்பாய்வு விஷேட நிபுணரின் ஆய்வுக்காக 13 ஆவது பிரதிவாதியை அங்கொடை – மன நல சுகாதார நிறுவனத்தில் முன்னிலைபப்டுத்தி அறிக்கை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று மன்றில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் , ருஷ்தி ஹபீப் , சட்டத்தரணிகளான ஜி.கே. கருனாசேகரவும், விஜித்தாநந்த மடவலகம, சுரங்க பெரேரா, ரிஸ்வான் உவைஸ் , அசார் முஸ்தபா, இம்தியாஸ் வஹாப், சச்சினி விக்ரமசிங்கவும் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சஜித் பண்டார உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி மனுஷிகா குரே உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
இந் நிலையில் பிணை குறித்த உத்தரவை சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த ஏனைய இருவரின் ஒப்புதலுடன் பிணை குறித்த தீர்மானத்தை அறிவித்தார்.
‘இவ்வழக்கில் பிரதிவாதிகள் 25 பேர் சார்பிலும் பிணை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதிவாதிகளுக்காக அவர்களது சட்டத்தரணிகள் எழுத்து மூலம் முன் வைத்த சமர்ப்பணங்களையும், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் முன் வைக்கப்பட்ட சமர்ப்பணங்களையும் இம்மன்று ஆராய்ந்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தின் 15ஆவது அத்தியாயம் பிரகாரம், ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 450,451 ஆகிய பிரிவுகள் இதனுடன் தொடர்புபடுத்தி பார்கப்பட வேண்டியதாகும்.
அவ்வறாயின் குற்றவியல் சட்டத்தின் 450 (6) பிரிவின் பிரகாரம் பிணை தொடர்பில் சட்ட மா அதிபரின் இணக்கப்பாடு பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனினும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 15 ( அ, ஆ) பிரகாரம் பிணையளிப்பதற்கான அதிகாரம் மேல் நீதிமன்ருக்கு உள்ளது. இது மேல் நீதிமன்றின் தீர்மானத்துக்கு பூரணமாக கட்டுப்படும் விடயமாகும்.
இந் நிலையில் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து காரணிகளையும் ஆராயும் போது, தற்போதைய சூழலில் பிரதிவாதிகளுக்கு பிணையளிப்பது உகந்ததல்ல என இந்த நீதிமன்ரம் தீர்மானித்து பிணைக் கோரிக்கைகளை நிராகரிக்கின்றது .’ என அறிவித்தார்.
இதனையடுத்து இவ்வழக்கை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி 2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப்
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

