தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியே முடிவடைகின்றது.
அதனால் தேர்தல் ஆணைக்குழுவே சபைகளை கலைப்பது தொட்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட்டு வரும் நிலையில், அந்த சபைகளுக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு வேட்புமனு கோரி இருப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் எதுவும் இதுவரை கலைக்கப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் முடிவடையும் காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியாகும். அவ்வாறாயின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் சபை உறுப்பினர்களாகவே போட்டியிடும் நிலை ஏற்படுகின்றது. இது அநீதியாகும்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமல் அந்த மன்றங்களுக்கு தேர்தலை நடத்த வேட்புமனு கோருவது இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை.
அதனால் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் நிலைப்பாடு என்ன என கேட்டதற்கு பதிலளிக்கையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவரத்தன தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தல் ஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திகதி குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் இன்று முதல் அதற்காக கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகின்றது. இதன் நடைமுறைக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களின் காலம் தொடர்பில் ஆணைக்குழுவே தீர்மானிக்கின்றது.
ஆனால் தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியே முடிவடைகின்றது. அதனால் தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே இதுதொடர்பில் யாரும் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் களுத்துறை தொகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வியாழக்கிழமை (5) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதனை பின்தொடர்ந்து அனைவரும் செயற்படட்டும் என்றார்.

