சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும்.
வரிகளை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டம் ஏதும் இருந்தால், தெரிந்தவர்கள் அதை தாராளமாக முன்வைக்கலாம் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.03) இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். கடன் மறுசீரமைப்பு என்பது இலகுவான விடயமல்ல. கடன் மறுசீரமைப்புக்காக பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதார தன்மையை ஸ்திரமாக பேண வேண்டுமாயின் நலன்புரி சேவைகளை மட்டுப்படுத்துமாறும் வரிகளை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தாவிட்டால் நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவே பொருளாதார முன்னேற்றத்திற்காக நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவது அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு உரிய காலத்தில் செல்லாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என குற்றஞ்சாட்டியவர்கள் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும் போது தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதை தவிர வேறு திட்டம் ஏதும் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டத்தை தெரிந்தவர்கள் தாராளமாக முன்வைக்கலாம் என்றார்.

