தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கான தினம் குறித்து ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர், செலவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடி தீர்மானிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நிதி நெருக்கடியைக் காரணமாகக் காண்பித்து உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செவ்வாய்கிழமை (2 ) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் நிதி நெருக்கடி காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் அனைவரையும் தேர்தலுக்கு தயாராகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சகல கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அதற்கமைய ஆணைக்குழு அறிவிக்கும் தினத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாட்டின் சகல துறைகளிலும் நிதி பிரச்சினை காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட சிக்கல் காணப்படுகிறது.
எனவே வேட்புமனு தாக்கலுக்கான தினம் தொடர்பில் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் தேர்தல் செலவுகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கும் என்றார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பில் கடந்த டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக தேர்தல் ஆணைக்கு தெரிவித்திருந்தது.
எனினும் காரணங்கள் குறிப்பிடப்படாது ஜனவரி 5 வரை அந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு வேட்புமனு தாக்கலுக்கான தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் , அடுத்தடுத்த தேர்தல்களிலும் தாக்கம் செலுத்தும் என்பதால் ஏதேனுமொரு வழியில் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என்று எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமையவே நிதி நெருக்கடியை ஒரு காரணமாக முன்வைத்து அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்தும் என்றும் அவ்வாறு முயற்சிக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதாகவும் எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

