இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சவாலுக்குட்படுத்தி தவறான ஆலோசனைகளுக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க போவதில்லை என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்தார்.
மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை அமைச்சரவை ஒருவார காலத்திற்கு பிற்போட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்னுற்பத்தி மற்றும் இதர சேவைகளுக்கான செலவு ஆகியவற்றை கருத்திற் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கினோம். கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை இலாபமடைந்துள்ளது.
2023ஆம் ஆண்டு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு ஆணைக்குழு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆணைக்குழுவை புறக்கணித்து மின்கட்டணத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் மின்சாரத்துறை அமைச்சர் ஈடுப்பட்டார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல மின்கட்டணத்தை அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சவாலுக்குட்படுத்தும் வகையில் தவறான ஆலோசனைகளுக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சாரத்துறை அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளது.
பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் மிக மோசமான பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்கட்டணத்தை அதிகரித்தால் நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் தோற்றம் பெறும் அது முழு இராச்சியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மின்வலுத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண மின்சார சபை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என்றார்.

