சீன பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் : பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் அறிவிப்பு

78 0

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. நாளாந்த  தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 1 ஆம் திகதி முதல் 20 ஆம்  திகதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவில் அதிகரித்து வரும் தொற்றை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடும் இந்த பணியில் இறங்கியுள்ளது. இதேபோன்று, அமெரிக்காவும், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

இதனையடுத்து, பிரித்தானியா, அரசும்  சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்க முடிவு செய்து, அதற்கான பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன.

சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.