இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு குறித்து கொழும்பில் ஆராயவுள்ள தமிழ் தலைவர்கள்

86 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தலைவர்கள் கொழும்பில் கூடவுள்ளனர்.

கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைகலநாதன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதோடு சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ்பிரேமச்சந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களுடன் சுமந்திரனும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது, ஐந்தாம் திகதி பேச்சுவார்த்தை தொடர்பில் தயாரிக்கப்படுகின்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பேசப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இறுதிசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேச்சுவார்த்தைகளின்போது, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் (இந்தியா) அவசியத்தினை விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், உள்ளிட்டவர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் அதுதொடர்பாகவும் கரிசனை கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.