தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் டிச.4-ம் தேதி வரை கனமழையால் பல மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது. வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நவ.14-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்ச்சேதம் கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையில், மிக அதிகமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43.92 கோடி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 8,562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6.97 கோடி என மொத்தம் 48,593 விவசாயிகளுக்கு ரூ.50.89 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

