தாழ்த்துவதற்கு முயற்சித்தால் , நீதிமன்றம் அதற்கு இடமளித்து விடக் கூடாது!

178 0

அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்தால் , நீதிமன்றம் அதற்கு இடமளித்து விடக் கூடாது.

தற்போதுள்ள அரசாங்கம், பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள் காலாவதியாகிவிட்டன. எனவே விரைவில் புதிய ஆட்சி உருவாக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை (30) இரண்டாவது நாளாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டது. எனினும் நீதிமன்றம் அதற்கு இடமளிக்கவில்லை. எனவே இம்முறையும் அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதேனுமொரு வகையில் முயற்சிக்குமானால் அதனை தடுப்பதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

சிறிய தாமதம் ஏற்பட்டாலும், தேர்தலை தொடர்ச்சியாக காலம் தாழ்த்த முடியாது. வாக்குரிமை என்பது அடிப்படை மனித உரிமையாகும்.

எனவே தேர்தலை காலம் தாழ்த்த முற்பட்டு வெட்கமடைய வேண்டாம் என்று அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு தீர்மானித்தன் பின்னர், நீதிமன்றம் அதற்கு முரணான தீர்ப்பினை வழங்கினால் அரசாங்கம் படுதோல்வியடையும்.

தற்போதுள்ள பிரதேசசபைகள் காலாவதியான பொருட்களைப் போன்றவையாகும். அதே போன்று தான் அரசாங்கமும் , பாராளுமன்றமும் காலாவதியாகியுள்ளது. இன்று புதிய மக்கள் நிலைப்பாடு நாட்டுக்கு அவசியமாகும்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களும் , புதிய பாராளுமன்றமும் தெரிவு செய்யப்பட வேண்டும். புதிய அரசாங்கத்திற்கு மாத்திரமே சர்வதேசத்துடன் தொடர்புகளைப் பேண முடியும்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் , வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும் என்றார்.