களுத்துறை – இங்கிரிய பொலிஸ் பிரிவில் நம்பபான பிரதேசத்தில் நபரொருவரை தாக்கிக் கொலை செய்து , குறித்த நபர் பயணித்துக் கொண்டிருந்த காரை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருந்த நபரை தாக்கி கொலை செய்து, அவரது கைகளையும் முகத்தையும் கட்டி சடலத்தை கெடகெடல்ல பிரதேசத்தில் வீசி சென்றுள்ளனர்.
பாணந்துறை குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் அலுபோமுல்ல பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமையவே குறித்த சந்தேகநபர்கள் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை மற்றும் ஹூங்கம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களால் கொள்ளையிடப்பட்ட கார், கொலை செய்யப்பட்ட நபர் உபயோகித்த 2 கையடக்க தொலைபேசிகள் , சந்தேநபர்களின் 3 கையடக்க தொலைபேசிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

