ஜனவரி மாதம் 07 கப்பல்கள் ஊடாக நிலக்கரிகளை பெற்றுக்கொள்ள 30 சதவீத முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
முதலாவது நிலக்கரி கப்பல் அடுத்த மாதம் 05 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு, நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைவதற்கு ஏற்பட்டுள்ள தாமதம் ஆகிய காரணங்களால் தற்போது இரண்டரை மணித்தியால மின்விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது. எதிர்வரும் 31,2023 ஜனவரி முதலாம் திகதி மின் விநியோக துண்டிப்பு இடம்பெறாது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பணிகளுக்கான நிலக்கரி இம்மாதத்துடன் நிறைவு பெறும் என தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரை நிலக்கரி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் மாத்திரம் 7 கப்பல்கள் ஊடாக நிலக்கரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் மாதம் 05ஆம் திகதி நாட்டை வந்தடையும். இந்த கப்பலில் தரையிறக்கப்படும் 60,000 மெற்றிக்தொன் நிலக்கரி நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கு அன்றைய தினமே அனுப்பி வைக்கப்படும்.
இரண்டாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி, மூன்றாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையும். ஜனவரி மாதம் 7 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும். நிலக்கரி கப்பல்களுக்கான 30 சதவீத முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது. மிகுதி 70 சதவீத கட்டணத்தை செலுத்த இலங்கை மின்சார சபை, இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளன.
அரசியல் விவகாரங்களில் முழுமையாக தடையிடும் ஓமல்பே சோபித தேரர் புத்தசாசனத்தை பாதுகாக்கும் விடயங்களில் தலையிடுவதில்லை. பாலி மற்றும் புத்தசாசன பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் அவர் இதுவரை அறியவில்லை என நினைக்கிறேன் என்றார்.

