சுமந்திரன் மீது விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் முற்றிலும் பொய்யானது!- விநாயகமூர்த்தி முரளிதரன்

326 0

எனக்கு உயிர் பயம் இல்லை ஆனால் எனது குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வாகன முறைக்கேடு இடம்பெற்றதாக பொய்யான குற்றச்சாட்டே என்மீது முன்வைக்கப்பட்டது. என்னிடம் முறையான நேர்மையான விசாரணைகள் இடம் பெறவில்லை. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆலோசனை செய்துள்ளேன். ஆனாலும் நாம் சிங்கள மக்களிடம் வாக்குகள் எதிர்பார்க்கவில்லை.

தமிழ் கட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளதால் சிங்கள மக்கள் எம் மீது சந்தேகப்படக் கூடாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அதேபோல் வடக்கிலும் எமக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது. எனக்காக செயற்பட ஆட்கள் இருக்கின்றார்கள். அதேபோன்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் அரசியலில் இணைந்து கொள்ளமுடியும்.

அதில் எந்த விதமான தவறும் இல்லை தாராளமாக முன்னாள் புலிகள் எம்முடன் இணைந்து அரசியலில் ஈடுபடலாம். ஜே வி பியில் உள்ளவர்கள் இப்போது பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.

அதேபோன்று தமிழ்தேசிய கூட்டமைப்பிலும் சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றோர் இருக்கின்றார்கள். அவர்களைப் போன்று சாதாரண வாழ்வில் இணைந்துள்ள போராளிகளும் அரசியலில் இணைந்து கொள்ளலாம்.

இதேவேளை சுமந்திரன் மீது விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் முற்றிலும் பொய்யானது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் சிலருக்கு யுத்தம் தேவைப்படுகின்றது. சிலர் இனவாதத்துடன் செயற்பட்டு கொண்டு வருகின்றார்கள்.

அதேபோல் விடுதலைப்புலிகளின் கொலைப் பட்டியலில் முதலாவது இருப்பவன் நானே. ஆனாலும் எனக்கு எந்தவித பயமும் இல்லை. என்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிச் சூடு காலில் பட்டது.

ஆனாலும் அதிஸ்டவசமான தப்பிப் பிழைத்தேன் அரசியலில் இருக்கும் போது உயிருக்கு பயப்படக் கூடாது. ஆனால் எனது மனைவி பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என நான் தெரிவிக்க மாட்டேன்.

அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால் மறைக்க வேண்டி இருக்கின்றது. எவ்வாறாயினும் எனக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாகும்.

சிங்கள மக்கள் என்னை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனது தலைமைத்துவத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் முரளிதரன் தெரிவித்தார்.