இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 20) முற்பகல் 10 மணிக்கு பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகியோரால் இப்புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எம்.பாஸில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். அய்யூப் நிகழ்த்தினார்.
இதன்போது உரையாற்றிய உபவேந்தர்,
இந்த உடன்படிக்கையானது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் ஊட்டி, பிராந்திய, சமூக பிரச்சினைகளை கையாளச் செய்தல் எனும் கூட்டு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடான நிகழ்ச்சித் திட்டமானது, சமூகவியல் துறை மாணவர்களை வலுவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.
மாணவர்கள் வலுவூட்டப்படுவதன் ஊடாக இன்றைய சமூகமானது போதைவஸ்து பாவனையின் அதிகரிப்பில் இருந்து விடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதனூடாக நிலைத்து நிற்கக்கூடிய சமூக வலுவூட்டலை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, இந்த உடன்படிக்கையின் மூலம் இந்நிகழ்ச்சித் திட்டமானது ஏனைய பீடங்களுக்கும் பரவலடையச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதனை தொடர்ந்து இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர உரையாற்றுகையில்,
உள்நாட்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்து சர்வதேச அனுபவங்களை கொண்டு தெளிவுபடுத்தினார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான பின்புலத்தை ஓய்வுபெற்ற உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் விளக்கினார். அதன் பின்னர் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் ஏ.சி.றஹீம், சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.றிஸ்வான், பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், போதனை சாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

