இலங்கை மின்சாரசபை எதிர்கொண்டுள்ள நஷ்டத்தினை ஈடுசெய்வதற்காக , 2023 ஜனவரியில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (டிச.20) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் தடையில்லா மின் விநியோகத்தை வழங்குவதற்கு மின் அலகொன்றை உற்பத்தி செய்வதற்காக 56.90 ரூபா செலவாகும் என்றும் , சகல தரப்பினருக்கும் இந்த கட்டணத்தை அறவிட்டால் மாத்திரமே, மின்சாரசபையை நஷ்டமின்றி நடத்திச் செல்ல முடியும் என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கமைய ஜனவரியிலிருந்து மின்கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறிருப்பினும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 4 மாதங்களில் இலங்கை மின்சாரசபை ஒரு பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது.
அவ்வாறிருக்கையில் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே மீண்டும் மின்கட்டண அதிகரிப்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதும் மின் கட்டண அதிகரிப்பினை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் இவ்வாண்டுக்கான இறுதி அமைச்சரவை கூட்டமாகக் காணப்பட்ட போதிலும் , மின் கட்டண அதிகரிப்பிற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.

