பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் இன்று (20) பூர்த்தி செய்த பின்னர் வெளியேறிச் சென்றுள்ளார்.
அதன்படி கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொலை முயற்சி மற்றும் கொலைகள் குறித்த சந்தேகத்தில் தொடரப்பட்டிருந்த அவ்வழக்கில் அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
அதன்படி இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் கஞ்சிப்பானை இம்ரான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்திச் செய்தார்.
2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணைகளில் அவ்வழக்கில் விடுவிக்கப்பட்ட அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனைவிட, வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் வலய சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிணையளித்துள்ளது.
குறித்த அவ்ழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்த நிலையில், சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தை மீளப் பெற்று தண்டனை சட்டக் கோவையின் கீழ் மட்டும் வழக்கை முன்கொண்டு செல்ல ஆலோசனையளித்திருந்தார்.
இதனையடுத்தே கஞ்சிப்பானை இம்ரான் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை ஏற்று கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க பிணையளித்துள்ளார்.
எனினும் அப்பிணை நிபந்தனைகள் இன்று பூர்த்தி செய்யப்பட்டன. அதன்படி, கஞ்சிப்பானை இம்ரான் அவ்வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவ்வழக்கிலும் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகளில் கஞ்சிப்பானை இம்ரான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா மன்றில் ஆஜரானார்.
முன்னதாக கடந்த 2019 ஏபரல் 4 ஆம் திகதி நாடு கடத்தப்ப்ட்ட நிலையில் சி.ஐ.டி. விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி போலி கடவுச் சீட்டிலேயே டுபாய் சென்றுள்ளார்.
போலி கடவுச் சீட்டு தொடர்பில் சி.ஐ.டி. தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை, கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.
2015 இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிப்பானை இம்ரான், 2016 ஜனவரி 26 ஆம் திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் தற்போது அனைத்து வழக்குகளிலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

