எதிர்கட்சிகளை சந்திக்க அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தீர்மானம்

136 0

வசந்த முதலிகேயின் விடுதலை மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை போன்றவை குறித்து எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெரென்ஸ் ரொட்ரிகோ மோர்னிங்கிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் பல கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் திட்டம் குறித்து தெளிவுபடுத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடனும் ஐக்கிய தேசிய கட்சியுடனும்  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தற்போதையை ஒடுக்குமுறைகளை இரு கட்சிகளும் இணைந்து முன்னெடுப்பதன் காரணமாகவே  அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான அழைப்பை விடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர்திணைக்களம் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும்  விருப்பத்திற்கு அமைய செயற்படுகின்றது இதன் காரணமாக வசந்த முதலிகேயின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில்  சிவில் சமூகத்துடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.