புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானம்

203 0

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் சின்னம் குறித்து தீர்மானித்து அறிவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அரசியல் தேவைக்காகவே தற்போது தேர்தலை நடத்துமாறு கோரப்படுகிறது.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும். எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் சின்னம் குறித்து தீர்மானித்து அறிவிக்கப்படும். கொரோனா தொற்று காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை ஓராண்டு காலம் தாழ்த்த வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

அதற்காக தொடர்ந்தும் தேர்தலை காலம் தாழ்த்துவது எமது நோக்கமல்ல. ஆனால், எதிர்க்கட்சிகள் அவ்வாறொரு சித்தாந்தத்தை நாட்டில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.

தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வது தாமதப்படும் எனில் , பழைய முறைமையில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணிலிருந்து விலகிச் சென்றவர்கள் அனைவரும் ஒரே கொள்கையின் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். ஜே.வி.பி உட்பட சில கட்சிகள் எப்போதும் பெருமை பேசிக் கொண்டிருப்பதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

அமைதியான போராட்டத்தை சிலர் அபகரித்தனர். போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளுமே இறுதி நேரத்தில் அங்கிருந்தனர் என்று  போராட்டத்தில் ஈடுபட்டவர்களே கூறுகின்றனர்.

பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துதல், வீடுகளுக்கு தீ மூட்டுதல் போன்றவை போராட்டத்தில் இருந்தே ஆரம்பித்தன. நாட்டில் நிம்மதியாக வாழ்வது, தாம் பெறும் வருமானத்திற்கு ஏற்ற பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவது போன்ற விடயங்களைத் தவிர மற்றுமொரு போராட்டத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று சிந்திக்க வேண்டும். இந்த நெருக்கடியை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். தனித்தனியாக செயற்படுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார்.