நாம் எவரது வாக்குகளையும் தட்டிப்பறிக்கவோ அல்லது எவரையும் விமர்ச்சிக்கவோ விரும்பவில்லை. எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆனாலும் தற்போது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு எதிர் காலத்தில் நாடு முழுவதும் புதிய உத்வேகத்துடன் செயல்படுவோம் என்றும் அதன் ஊடாக தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய அபிலாஷைகளை வென்றேப்படுதே எமக்கான இலக்கு என்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையாக பதிவு செய்யப்பட்டு, கட்சியின் முதலாவது உத்தியோகபூர்வ மாநாடு சனிக்கிழமை (17) சுகதாச விளையாட்டு அரங்கு ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அரசியல் கட்சியாக தபால் பெட்டி சின்னத்தில் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆனாலும் எதிர் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் மிகவும் உத்வேகத்துடன் செயல்படுவோம். மேலும் எதிர்வரும் காலத்தில் நடைபெற இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி நாடு முழுவதும் போட்டியிடும்.
தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதே எமது நோக்கமாகும். குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அடிப்படை தேவைக்காக சிரமப்படும் மக்கள் இன்று நிர்கதியாகியுள்ளனர்.
நாம் எவரது வாக்குகளையும் தட்டிப்பறிக்கவோ அல்லது எவரையும் விமர்ச்சிக்கவோ விரும்பவில்லை. மாறாக நாம் ஆரப்பணிப்புடன் எமது மக்களுக்காக சேவையாற்ற உள்ளோம். மேலும் நான் பாராளுமன்றத்தில் 2010 முதல் 2015 வரை இருந்த காலத்தில் கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு ஆற்றிய சேவையினை தமிழ் மக்கள் மறக்கவில்லை.
எம்மை பொறுத்தவரை அரசியலில் எந்த ஒரு தேசிய கட்சியுடனும் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்படவில்லை. இன்றைய காலத்தின் தேவை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதேயாகும். அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.
கொழும்பு கம்பஹா களுத்துறை வன்னி மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் எமது அரசியல் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு ரீதியில் இனிவரும் காலங்களில் ஈடுபடுவோம். மேலும் கட்சி கட்டமைப்பிற்குள் பாரிய அளவில் இளைஞர்களை உள்வாங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளோம். பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதனை நிவர்த்தி செய்வோம்.
இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இனப்பிரச்சினை என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே தீர்வு காணப்பட்டு இருக்க வேண்டிய ஒன்றாகும். அன்று நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்த தமிழ் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இன்று எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்துகிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. எம்மை பொறுத்த வரையில் கூடிய விரைவில் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
மேலும் இந்தியாவின் தலையீடு இன்றி எமக்கான அரசியல் தீர்வுக்கு இடமில்லை. இந்தியாவின் மத்தியஸ்தம் மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா பல உதவிகளை செய்திருந்தது. அதனடிப்படையில் இந்திய தலைவர்களுடன் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடிய தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்போம் என்றார்.

