தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை

84 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாறாக தேர்தலை நடத்துவதற்கும் , அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளுமே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (13) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான தயார்ப்படுத்தல்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவே தெரியவருகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஜனவரியில் வேட்புமனு தாக்கல் இடம்பெற்று , பெப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் சட்டமூலமொன்றின் ஊடாக தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவிய போது , தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் , அதற்கமைய இம்மாத இறுதியில் நிச்சயம் வேட்புமனு தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.