அமைச்சர்கள் இருவார காலத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும்

84 0

இலங்கை மின்சார சபை அறவிட வேண்டிய மின்சார நிலுவை தொகை 25,836 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அரச உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் அமைச்சர்கள் இருவார காலத்திற்குள் மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அரசியல்வாதிகளின் மின் கட்டண நிலுவை தொகை 70 சதவீதமளவில் தற்போது செலுத்தப்பட்டுள்ளது என மின்சார மற்றும் வலுசக்தி துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை மின்சார சபை அறவிட வேண்டிய மின்சார கட்டண நிலுவை பட்டியல்களின் பெறுமதி கடந்த ஒக்டோபர் மாதம்  முதலாம் திகதி மதிப்பீட்டுக்கமைய 25,836 மில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.

மின்சார கட்டண அறவிடலில் பிரபல்யமான மற்றும் பலமிக்க நபர்கள் என வேறுபாடு காட்டப்படுவதில்லை அனைவரிடமிருந்தும் சமமான அடிப்படையில் மின் கட்டணம் அறவிடப்படுகிறது.

மின்சார கட்டணத்தை செலுத்தாமல் இருப்பவர்களிடமிருந்து  நிலுவை தொகையை அறவிட இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

மின் கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதற்கமைய கடந்த 3 மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மின்துண்டிப்பை தொடர்ந்து 3 பில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,

மின்சார பிரச்சினை நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது.மின்கட்டண அதிகரிப்பால் வசதி படைத்தவர்கள் முதல் ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மின் கட்டண அதிகரிப்பால் பல கைத்தொழில் முயற்சியாளர்கள் தொழிற்துறையை கைவிட்டுள்ளார்கள். தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை பாதிக்கப்பட்டால் அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகவே குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மின்கட்டணம் ஊடாக நிவாரணம் வழங்க அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்,

மின்னுற்பத்திக்கான செலவுக்கும்இகிடைக்கப் பெறும் வருமானத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

மின்சார பயன்பாடு மற்றும் மின்னுற்பத்திக்கான செலவை குறைத்தல் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.மின்கட்டணத்தை அதிகரிக்காமல் மின்வலுத்துறை சேவையை முன்னெடுத்து செல்ல முடியாது.

அரசியல்வாதிகள் மின்கட்டணத்தை செலுத்துவதை தவிர்த்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மின்சார கட்டணத்தை செலுத்தாத பல அரசியல்வாதிகள் இன்று அரசியலில் இல்லை.

ஒரு சிலர் உயிருடனும் இல்லை. அரச உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் அமைச்சர்களின் மாத மின் கட்டணம் இருவார காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் நிலுவை மின் கட்டணம் 70 சதவீதமளவில் தற்போது செலுத்தப்பட்டுள்ளது என்றார்.