தம்மையும் தனது மகனையும் தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பல்கலைக்கழக மாணவர்களிடையே ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியவர்களும் இருந்ததாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிதளவு தாமதம் ஏற்பட்டிருந்தால் மாணவர்கள் தன்னையும், தனது மகனையும் கொன்றிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பேராசிரியர் நேற்று (12) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். ‘இவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். எப்படியோ மகனைக் காப்பாற்றி வீட்டுக்குள் போட்டுவிட்டோம், மகனை வெளியே விடும்படி எங்கள் இருவரையும் அடித்தனர். இதனால் நான் காயமடைந்தேன்.
இதன் காரணமாகவே அவர்கள் அதிக போதைப்பொருள் பாவித்திருந்ததாக நான் நினைக்கிறேன். எங்களை கொல்ல நினைத்தார்கள். மகனின் கார் விபத்துக்குள்ளானதாக அவர்கள் கூறினாலும் மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

