மாணிக்க கல் தேடும் பணியில் ஈடுபட்ட நபர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பரிதாபமாக பலி!

172 0

மடுல்சீமை பெருந்தோட்ட  பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்  பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட  2ஏ இலக்க தேயிலை மலை  பகுதியில் சட்டவிரோதமாக மூவர் அடங்கிய குழு ஒன்று மாணிக்ககல் சுரங்க குழியில் மண்ணை அகழ்ந்து கொண்டிருந்த போது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்  பொகவந்தலாவை டின்சின் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய கனகரத்தினம் உபேந்திரன் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்வம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அத்தோடு,  ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில்  மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் பொகவந்தலவை மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட  2ஏ இலக்க தேயிலை மலை பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.