பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம்

178 0

பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 8(8) உறுப்புரையின் பிரகாரம் தேர்தலொன்றின் போது தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரால் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்கநெறிக் கோவையானது தேர்தல் ஆணைக்குழுவால் 2178/25 மற்றும் 2020.06.03 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஒழுக்கநெறி மீறப்படும் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய படிமுறைகள் மற்றும் குறித்த படிமுறைகள் பதவிக்காலம் வரை நடைமுறையிலுள்ளமையைக் குறித்துரைக்கும் ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்கும், அடையாளங் காணப்படும் விசேட பதவிகளை வகிக்கின்ற நபர்களுக்கு தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு வெளியே விசேட நிலையமொன்றில் தேர்தல் தினத்தில் வாக்களிப்பதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு இயலுமாகுமாறு 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்வது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதற்கான ஏற்பாடுகளை உட்சேர்த்து குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.